செவ்வாய், 5 மே, 2009

ஜோசியம்...... ஜோசியம்!(மெட்டுப்பாடல்)

ஜோசியம்.... ஜோசியம்....!!
அய்யா ஜோசியம்.... ஜோசியம்......!!
அம்மா ஜோசியம்.... ஜோசியம்......!!

ஆறறிவு மனுசன்
அய்ந்தறிவு கிளிகிட்ட
அக்கறையா கேக்கிறாங்க ஜோசியம்! (ஜோசியம்)
கல்யாணம் பண்ணுறவன்
காதுகுத்த எண்ணுறவன்
கையநீட்டி கேக்கிறான் ஜோசியம்! (ஜோசியம்)

கம்யூட்டர் விக்கிறவன்
கைநாட்டு வைக்கிறவன்
காலமெல்லாம் பார்க்கிறாங்க ஜோசியம்!! (ஜோசியம்)

கட்டையில போகையிலும்
கரித்துண்டா வேகையிலும்
கையநீட்டி கேக்கிறாங்க ஜோசியம்!
காசுபணம் வந்தவனும்
கஷ்டம் வந்து நொந்தவனும்
கண்டிப்பா பாக்கிறது ஜோசியம்!! (ஜோசியம்)

மாடிவீட்டில் வாழுறவன்
மரத்தடி ஆளுகிட்ட
மண்டிபோட்டு கேக்கிறான் ஜோசியம்!
ஏழை பணக்காரனும்
கோழையோட வீரனும்
கூடிகூடி கேக்கிறாங்க ஜோசியம்!! (ஜோசியம்)

வீடுகட்டப் போறவனும்
வீணாப் போறவனும்
விரும்பித்தான் பார்க்கிறான் ஜோசியம்!
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம் பண்ணுறவன்
கள்ள நோட்ட எண்ணுறவன்
காலமெல்லாம் பாக்கிறான் ஜோசியம்!! (ஜோசியம்)

பட்டம் படிச்சவனும்
பட்டை அடிச்சவனும்
பலபேரும் பாக்குறது ஜோசியம்!
சாராயம் எரிப்பவன்
சங்கிலியைப் பறிப்பவன்
சகலரும் பாக்குறது ஜோசியம்!! (ஜோசியம்)

லஞ்சப்பணம் வாங்குறவன்
லாட்டரிக்கு ஏங்குறவன்
வஞ்சகனும் பாக்கிறான் ஜோசியம்!
பள்ளிக்கூடம் படிப்பவங்க
படத்துல நடிப்பவங்க
பணங்கட்டிப் பாக்குறாங்க ஜோசியம்! (ஜோசியம்)

புள்ளகுட்டி பெத்தவங்க
பொறம்போக்க வித்தவங்க
பொழுதெல்லாம் பாக்கிறாங்க ஜோசியம்!
போதையில் ஆடுறவன்
புதையலத் தேடுறவன்
போட்டிபோட்டு பாக்குறாங்க ஜோசியம்! (ஜோசியம்)
பணங்காசு தேடுறவன்
பட்டினியில் வாடுறவன்
பலபேரும் பாக்குறாங்க ஜோசியம்!
கல்லாத மக்களிடம்
இல்லாத கதைசொல்லி
பொல்லாத பாதகனை
பொழப்பு நடத்தவைக்கும் ஜோசியம்!
இதை புரட்டிப் போடணும்
புது தேசியம்! தேசியம்!! தேசியம்!!!

- சுய.சரவணன், மன்னை மேலவாசல்

இலங்கையின் இருண்ட வரலாறு....

தாய் வசிக்கிறாள் தாய்லாந்து நாட்டில்....!
தந்தையோ அகதியாய்
தமிழ்த்திருநாட்டில்...!!
கணவன் ஊனமாய்
கனடா நாட்டில் ..!
கட்டிய மனைவியோ கள்ளி காட்டில் ....!
ஈழத்து கள்ளிக்காட்டில்...!!!
உறவை இழந்த மக்கள் ...!
ஊரை இழந்த மக்கள் ..!
உறுப்பை இழந்த மக்கள் ..!!
ஆனாலும் இவர்கள் இன
உணர்வை இழக்காத மக்கள் ..!!
தமிழன் கறி விற்கின்றது
கசாப்பு கடை .!
தமிழச்சி மானம் பறிக்கிறது
சிங்களப்படை ..!!
வீடுகளை இடிக்கின்றது
விமானப்படை ..!
வீதியில் நிற்பதுதான் இனி
தமிழனின் நிலை ..!!
உலகத்தின்
எல்லா தேசத்திலும்
சுடுகாடு உள்ளது
ஆனால்
இந்த தேசம் மட்டும்தான்
சுடுகாட்டில் உள்ளது .!
கைத்தொழில் தொடங்கி
கனரக தொழில் வரை
சிங்கள இராணுவம்
சீரழித்து விட்டது ..!!
இனி இந்த தேசத்தில்
சவப்பெட்டிகளுக்கு தான்
சரியான தொழில் வளமும்
சந்தை வளமும் இருக்க போகிறது .!!
சவப்பெட்டிகள்
அதிகம் விற்பனையாகும்
ஆசிய நாடு என்னும் பெருமை
இலங்கை தேசத்துக்கு மட்டுமே
இருக்க முடியும் ..!!
பல்லாங்குழி ஆடும் வயதில்
பதுங்கு குழி தேடும்
பரிதாப நிலையில்
பாவப்பட்டவர்களாய்
பாவையர் கூட்டம்.!!!
மக்களுக்கு பகவானை விட
பதுங்கு குழிகள்தான்
பாதுகாப்புக்கு தருகிறது .!!
மரணத்தின் பிடியில் தவிக்கும்
மனிதாபிமானம் ..!
சிங்களச் சிப்பாய்களின்
தூப்பாக்கி கத்திகள்தான்
தமிழ் பெண்களுக்கு
கருவறை கிழித்து
பிரசவம் பார்க்கிறதாம்..!!
என்ன பாவம் செய்தார்கள்
எங்கள் தமிழச்சிகள் ?
நினைவு நாட்களும்
இழவு நாட்களும் மட்டுமே
தமிழர் வீடுகளில்
தினம் தினம் நிகழும் திருவிழா ..!
கணவன் கண் முன்னே
கற்பழிக்கும் கொடுமை .!
தந்தையை பார்க்க வைத்து
தகாத உறவு .!!
சிறுமிகளை துரத்தி
சிற்றின்பம் .!!!
இவற்றில் தான்
சிங்கள இராணுவம்
பெற்றுள்ளது
சிறப்பு பயிற்சி ..!!
அநேகமாய்
அடுத்த நூற்றாண்டில்
இலங்கை தமிழனின்
எலும்பு கூடுகள் தான்
எஞ்சி இருக்க கூடும் .!
நேற்று
புத்த பூமி ..!
இன்று
யுத்த பூமி ..!
நாளை
தமிழன் செத்த பூமி .!!!
இவைதான் இனி
இலங்கை தேசத்தின்
இருண்ட வரலாறு .!!!